பெங்களூரு (கர்நாடகா):கர்நாடகா மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜேந்திரா மற்றும் பிற பிரமுகர்களுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பதிவிற்காக கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், கார்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான டி.கே.சிவக்குமார் மீது எப்ஐஆர் பதிவு செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த ஜனவரி மாதம் 60 வயதான இந்து ஆர்வலர் ஸ்ரீகாந்த் பூஜாரி என்பவரை 31 ஆண்டு வழக்கு தொடர்பாக ஹூப்ளி போலீசார் கைது செய்தனர். இந்த கைதிற்கு கண்டனம் தெரிவித்து மாநில பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜேந்திரா, முன்னாள் அமைச்சர்கள் சுனில் குமார், கே.எஸ்.ஈஸ்வரப்பா, எம்பி பிரதாப் சிம்ஹா, சி.டி.ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், “நான் கரசேவகர், என்னை கைது செய்யுங்கள்” என பதாகைகளை ஏந்திச் சென்றனர். இந்த புகைப்படங்களைப் பயன்படுத்தி, அதில் விஜேந்திரர் கையில் இருந்த பதாகையில், “ஆர்டிஜிஎஸ் மூலம் ரூ.40 ஆயிரம் கோடி லஞ்சம் வாங்கியுள்ளேன், என்னை கைது செய்யுங்கள்” என மாற்றம் செய்து பதிவிட்டிருந்துள்ளனர்.