சண்டிகர்: பாலிவுட் நடிகையும் இமாச்சல பிரதேச பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் அதிகாரிக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென பெண் அதிகாரி கங்கனாவின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்த இடத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கங்கனா ரனாவத் தீவிரவாதிகள் என விமர்சித்ததால் பெண் அதிகாரி கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கங்கனா ரனாவத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "ஊடகங்கள் மற்றும் எனது நலம் விரும்பிகளிடமிருந்து எனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. முதலில், நான் பாதுகாப்பாக இருக்கிறேன். சண்டிகர் விமான நிலையத்தில் இன்று நடந்த சம்பவம் அது.
பாதுகாப்பு சோதனை முடிந்து நான் வெளியே வந்தவுடன், இரண்டாவது கேபினில் இருந்த சிஐஎஸ்எப் பெண் பாதுகாவலர் என் பக்கத்தில் வந்து முகத்தில் அடித்து, என்னைத் தவறாக பேசத் தொடங்கினார். ஏன் அப்படி செய்தீர்கள் என்று நான் கேட்டதற்கு, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக கூறினார்.
நான் பாதுகாப்பாக இருக்கிறேன் ஆனால் பஞ்சாபில் அதிகரித்து வரும் தீவிரவாதம் மற்றும் அது குறித்து கவலை கொள்கிறேன்" என்று அந்த வீடியோவில் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். முன்னதாக மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம், பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டங்கலை கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இதனால் பல்வேறு தரப்புகளில் இருந்தும் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், சண்டிகர் விமான நிலையத்தில் பெண் பாதுகாவலர் தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. 18வது மக்களவை தேர்தலில் இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்ட கங்கனா ரனாவத் 5 லட்சத்து 37 ஆயிரத்து 22 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங் 4 லட்சத்து 62 ஆயிரத்து 267 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதனிடையே பாஜக எம்பி கங்கனா ரனாவத் மீது தாக்குதல் நடத்திய பெண் பாதுகாப்பு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சிறப்பு அந்தஸ்து என்றால் என்ன? ஆந்திரா, பீகார் சிறப்பு அந்தஸ்து கோர காரணம் என்ன? அதனால் என்ன பலன்? - What Is Special Status