புதுடெல்லி:சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) மகாதேவன் உள்பட இரண்டு நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்று கொண்டுள்ளனர். காலியாக இருந்த இரண்டு நீதிபதிகள் பணியிடங்களும் நிரப்பப்பபட்டுள்ளதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக முழுமையடைந்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த அனிருத்ரா போஸ் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதியும், ஏ.எஸ்.போபண்ணா மே மாதம் 19 ஆம் தேதியும் பணி ஓய்வு பெற்றனர். இதையடுத்து, இவ்விரு நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப, உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான கொலீஜியம், மத்திய அரசுக்கு கடந்த ஜுலை 11 ஆம் தேதி பரிந்துரைத்தது. அதில், ஜம்மு -காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என். கோட்டீஸ்வர் சிங் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) மகாதேவன் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.