கொல்கத்தா:மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், மருத்துவக் கல்லூரியின் நான்காவது மாடியில், பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்தவர் கடந்த வியாழக்கிழமை இரவு பணியில் இருந்த நிலையில், கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், மருத்துவமனையில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வர அனுமதி வழங்கப்பட்டு இருந்த சஞ்சய் ராய் என்பவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இரண்டு மருத்துவர்களிடம் போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறியும் முதுநிலை மருத்துவம் பயின்று வரும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்டமாக, மருத்துவ மாணவியின் உடல்கூராய்வில், மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பிறகு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தற்கொலை அல்ல என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கும் போலீசார், மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்து உள்ளனர்.
மேலும் மாணவியின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது மூச்சை நிறுத்திக் கொலை செய்யப்பட்டதாகவு பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் முழுக்க காயங்கள் இருந்ததால் மாணவி அடித்துக் கொல்லப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.