தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை மீறி வக்ஃபு வாரிய சட்டத்தில் திருத்தங்களை ஏற்றது நாடாளுமன்ற கூட்டுக்குழு! - JPC ADOPTS WAQF BILL

வக்ஃபு வாரிய திருத்தங்களை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கு குழுவில் இருக்கும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்தின் பிரிவுகள் சட்டவிரோதமானவை என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்ற கூட்டுக்குழு
நாடாளுமன்ற கூட்டுக்குழு (Image credits-IANS)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2025, 4:37 PM IST

புதுடெல்லி:வக்ஃபு வாரிய சட்டத் திருத்தங்களை நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் உள்ள 15 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து இந்த திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கூட்டுக்குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பால் தெரிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டுக் குழு ஏற்றுக் கொண்டதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இஸ்லாமியர்களின் ஆன்மிக விவகாரங்களில் அரசின் தலையீட்டை அனுமதிக்கும், வக்ஃபு வாரியத்தை அழித்து விடும், சட்டவிரோதம் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

வெளிப்படை தன்மை: இதுகுறித்து பேசிய நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பால், "பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் வக்ஃபு வாரிய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனை கூட்டுக்குழு அங்கீகரித்துள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வரும்போது வக்ஃபு வாரியம் அதன் கடமைகளை வெளிப்படையாகவும், மேலும் திறன் வாய்ந்ததாகவும் செயல்படுத்தும்.

முதன்முறையாக பின் தங்கிய இஸ்லாமியர்கள், ஏழைகள், பெண்கள், கைவிடப்பட்டோர் வக்ஃபு வாரியத்தின் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மத நோக்கம் கொண்ட அறக்கட்டளையாக இஸ்லாமியர்களுக்காக நிதி கொடை அளிக்கும் அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கையானது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாடாளுமன்றம்தான் தீர்மானிக்கும்,"என்றார்.

போதுமான நேரம் தரவில்லை:வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்ற கூட்டுக் குழு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி அமைக்கப்பட்டது. இது தொடர்பாக இந்த குழு 38 முறை கூடியுள்ளது. நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பாலின் செயல்பாடுகளில் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தன. வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கை 655 பக்கங்களைக் கொண்டதாகும். ஆனால், இந்த அறிக்கை செவ்வாய்க்கிழமை இரவு தான் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டது. அறிக்கையை முழுவதுமாக படிக்க போதுமான நேரம் தரப்படவில்லை என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:புனேவை அச்சுறுத்தும் GBS நோய்: "தமிழ்நாட்டில் வருவதற்கு வாய்ப்பில்லை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இது குறித்து பேசிய திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.கல்யாண் பானர்ஜி, "கூட்டுக்குழுவின் கருத்துகள், பரிந்துரைகள் முற்றிலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை,"என்றார். மேலும் இது குறித்து கருத்துத் தெரிவித்த ஓவைசி, "முன்மொழியப்பட உள்ள இந்த சட்டம் வக்ஃபு வாரியங்களை அழிக்கும் வகையில் உள்ளது. அதன் செயல்பாடுகளில் அரசின் தலையீடுகளை அனுமதிக்கும் வகையில் இது உள்ளது," என்றார்.

காங்கிரஸ் எம்பி சையது நசீர் ஹூசைன், "வக்ஃபு வாரிய சட்டத்திருத்தங்கள் சட்டவிரோதமானவை. சிறுபான்மையினரை குறி வைத்து இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது," என்றார். திமுக எம்பி ஆ.ராசா, "இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடுக்கும்,"என்றார்.

ஆட்சியரின் அதிகாரம் நீக்கம்:எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் அளித்த பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, "வக்ஃபு வாரியம் குறித்த சட்டத் திருத்தம் என்பது வக்ஃபு வாரியங்களை பொறுப்புடமை ஆக்குவதும், அதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதுமே ஆகும். இஸ்லாமியர்களுக்கு இது அதிகாரம் அளிக்கும் வகையில் உள்ளது," என்றார்.

ஏற்கனவே உள்ள பழைய வக்ஃபு வாரிய சட்டத்தில், வக்ஃபு வாரியம் உபயோகிப்பாளர் என்ற பிரிவை நீக்கும் அரசின் முடிவை கூட்டுக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது. வக்ஃபு வாரியங்களில் இஸ்லாமியர் அல்லாதவர்களை நியமிக்கும் அரசின் முடிவையும் நாடாளுமன்ற கூட்டுக்குழு அங்கீகரித்துள்ளது. அப்படி நியமிக்கப்படும் இஸ்லாமியர் அல்லாதோர் பயனாளிகளாக அல்லது வக்ஃபு வாரிய விவகாரங்களில் ஆர்வம் கொண்டவர்களாகவோ இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. வக்ஃபு வாரியம் தொடர்பாக அரசுடன் தீர்வு காண வேண்டிய அம்சங்களில் மாவட்ட ஆட்சியருக்கு இருக்கும் விசாரணை அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது. அப்படியான அம்சங்களை விசாரிக்க மாநில அரசே ஒரு மூத்த அதிகாரியை நியமிக்கும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

1995-ம் ஆண்டின் வக்ஃபு வாரிய சட்டத்தை திருத்தும் நோக்கத்துடன் 2024ஆம் ஆண்டின் வக்ஃபு வாரியம் (திருத்த) மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அதிருப்தியை அடுத்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு இந்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி அனுப்பப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details