ஶ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கக்கோரி ஒமர் அப்துல்லா தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துடன் டெல்லி சென்று அவர் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கையை வலியுறுத்த உள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக ஒமர் அப்துல்லா கடந்த 16ஆம் தேதி பதவி ஏற்றார். இந்த நிலையில் ஶ்ரீநகரில் உள்ள ஜம்மு-காஷ்மீர் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்தில் ஐந்து அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈடிவி பாரத்துக்கு கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்துக்கு அனைத்து அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 307 ஆவது சட்டப்பிரிவு கடந்த 2019ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேச மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து பெறப்படும் என்று தேசிய மாநாடு கட்சி சார்பில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அதற்கு முக்கியத்துவம் தரும் வகையில் இப்போது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. தீர்மான நகலுடன் அடுத்த சில நாட்களில் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தீர்மான நகலை வழங்க உள்ளார்.
இதையும் படிங்க :"டெல்லி போன்று காஷ்மீரை நடத்த முடியாது" புதிய அரசு எப்படி இருக்கும்? - ஒமர் அப்துல்லா பிரத்யேக பேட்டி