டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தேர்தலுக்கு பின் புதிய அரசு அமைந்ததும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். குடியரசு தலைவரின் பட்ஜெட் உரை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி பிரதமர் மோடி மக்களவையில் உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். காங்கிரஸ் தலைமையிலான 2014-க்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில், இந்தியாவின் பொருளாதார நிலையுடன் தற்போது மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடும் வகையில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளால் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த போது, பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்ததாகவும் பொது நிதி மோசமான நிலை, வாராக்கடன் அதிகமாக இருந்ததால் வங்கிகள் அதிக பலவீனமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.