ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்துக்கு உட்பட்ட அகார் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக நேற்று மாலை (ஆக.13) இந்திய ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து ஜம்மு -காஷ்மீர் மாநில போலீசுடன் இணைந்து இந்திய ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியது. இரவு நேரம் என்பதால் வனப்பகுதியில் இருள் கவ்வி இருந்தால் குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு தேடுதல் வேட்டையை தற்காலிகமாக நிறுத்தும்படி ஆனது. இன்று அதிகாலை முதல் பயங்கரவாதிகளை தேடும் வேட்டை மீண்டும் தொடர்ந்தது.
அப்போது பயங்கரவாதிகள் தோடா மாவட்டத்துக்குட்பட்ட அஜார் பகுதியில் ஓடும் ஆற்றுக்கு அருகே பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை சுற்றிவளைக்கும் நோக்கில் பாதுகாப்புப் படையினர் முன்னேறி சென்றனர். அப்போது பாதுகாப்புப் படைக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.