தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"அரசியல்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்தானே.".. அமைச்சர் எல்.முருகன் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து! - SUPREME COURT CASE TODAY

ஒருவர் அரசியலுக்குள் நுழையும்போது தேவையற்ற பேச்சுகளையும் கேட்க தயாராக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் எல்.முருகனின் மேல்முறையீடு வழக்கு விசாரணையின்போது நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றம் -  கோப்புப்படம்
உச்ச நீதிமன்றம் - கோப்புப்படம் (Credits - IANS)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2024, 10:41 PM IST

புதுடெல்லி: 'தற்போது மத்திய அமைச்சராக உள்ள எல்.முருகன், கடந்த 2020 டிசம்பரில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தங்களது அறக்கட்டளை மீது அவதூறு பரப்பும் விதத்தில் பேசினார்' எனக் கூறி, சென்னையில் இருந்து செயல்பட்டு வரும் முரசொலி அறக்கட்டளை சார்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் எல்.முருகனுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்ய கோரி எல்.முருகன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து எல்.முருகன், உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 5 இல். மேல் முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அமைச்சருக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து கடந்த ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் பி.ஆர். காவே மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, " 'உங்கள் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை' என்று மனுதாரர் கூறுகிறார். இதில் உங்களுக்கு அவதூறு நோக்கம் எதுவும் இல்லை என்று தெரிவிக்க நீங்கள் தயாரா?" என்று நீதிபதிகள் எதிர்மனுதாரர் தரப்பு வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, "தங்களது பேச்சுக்காக பதவியில் இருப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும்" என்று முரசொலி அறக்கட்டளை தரப்பு வழக்குரைஞர் பதிலளித்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், " ஒருவர் அரசியலுக்குள் நுழையும்போது தேவையற்ற பேச்சுகளையும் கேட்க தயாராக இருக்க வேண்டும்" என்று கூறினர். இதற்கு, " அவர்கள் (முரசொலி அறக்கட்டளை) அரசியலில் ஈடுபடவில்லை என்று கூறிய வழக்குரைஞர், நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க வியாழக்கிழமை (நாளை) வரை அவகாசம் கோரியதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details