புதுடெல்லி:அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்த மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸுக்கு எதிராக பாஜகவும் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியதில் பரஸ்பரம் தாக்கிக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்துக்கு உள்ளே இரு அவைகளிலும் ஏற்கனவே பரஸ்பரம் கூச்சல் குழப்பத்தில் ஈடுபடும் ஆளும் கட்சி-எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்துக்கு வெளியே கைகலப்பில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 17ஆம் தேதி மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அமித்ஷாவை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியை கண்டித்து பாஜகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த மோதலில் காயம் அடைந்ததாக பாஜக எம்பிக்கள் பிரதாப் சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திதான் தங்களை தள்ளி விட்டனர் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள ராகுல், "என்னை நாடாளுமன்றத்தில் நுழைய விடாமல் பாஜக எம்பிக்கள் தடுத்து நிறுத்தினர்,"என்று கூறினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக போராட்டம் (Image credits-PTI) என்ன நடந்தது?:இது குறித்து பேசிய பாஜக எம்பி பிரதாப் சந்திரா சாரங்கி, "நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளே செல்லும் படிக்கட்டு அருகே நின்றிருந்தேன். அப்போது ராகுல் காந்தி வந்தபோது, ஒரு எம்பியை தள்ளி விட்டார். அந்த எம்பி என் மீது விழுந்ததால் நான் கீழே விழுந்து காயம் அடைந்தேன்," என்று கூறினார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு செல்வதாக ஊடகங்களிடம் அவர் தெரிவித்தார். இதை மறுத்துள்ள ராகுல், "நான் நுழைவு வாயில் அருகே நின்றிருந்தேன். அங்கே பாஜக எம்பிக்கள் இருந்தனர். என்னை அவர்கள் தடுத்தனர். என்னை தள்ளி விட்டனர். என்னை அச்சுறுத்தினர்," என்று கூறியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் போராட்டம் (Image credits-PTI) இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, பாஜக எம்பிக்கள் என்னை தள்ளி விட்டனர் என்று கூறியுள்ளார். மேலும் இது குறித்து மக்களவை தலைவருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், "பாஜக எம்பிக்கள் தள்ளிவிட்டதால் நிலைகுலைந்து விழுந்து விட்டேன். தரையில் அமர்ந்து விட்டேன். இது என் மீது தனிப்பட்ட முறையில் நடந்த தாக்குதல் மட்டும் அல்ல. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருக்கான கண்ணியகுறைவு," என்று தெரிவித்துள்ளார். இதனால், ஏற்கனவே முழங்கால் மூட்டு வலியால் அவதிப்படும் கார்க்கே, நடக்க முடியாமல் இன்னொருவர் உதவியுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார்.
பாஜக குற்றச்சாட்டு: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு எதிராக பாஜகவும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது. இது குறித்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, "காங்கிரஸ் கட்சி எப்போதுமே அம்பேத்கரை இழிவு படுத்தி வருவதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது ராகுல் காந்தி பாஜக எம்பிக்கள் முகேஷ் ராஜ்புத், பிரதாப் சாரங்கி ஆகியோரை தள்ளி விட்டுள்ளார். இவ்வாறு சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தாக்குவதற்கு எந்த சட்டத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது?" என்று கேட்டுள்ளார். இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி, காயம் அடைந்த பாஜக எம்பிக்களை சந்தித்து அவர்களிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் எம்பிக்கள் தாக்கப்பட்டது குறித்த வீடியோக்களை ஆய்வு செய்து வருவதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் எம்பி குற்றச்சாட்டு:இதனிடையே நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த பாஜக பெண் எம்பி ஃபாங்னான் கொன்யாக் அளித்த பேட்டியில், போராட்டத்தின் போது ராகுல்காந்தியால் அசெளகர்யமாக உணர்ந்தாக கூறியுள்ளார். ,"நான் அமைதியான முறையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது ராகுல் அங்கு வந்தார். எனக்கு நெருக்கமாக நின்றிருந்தார். இதனால் நான் அசெளகர்யமாக உணர்ந்தேன். அப்போது அவர் என்னை பார்த்து உரத்தகுரலில் கத்தினார்," என்று கூறியுள்ளார். இதனிடையே அனுராக் தாக்கூர், பன்சூரி ஸ்வராஜ் உள்ளிட்ட பாஜக எம்பிக்கள் நாடாளுமன்ற தெரு காவல் நிலையம் சென்றனர். அங்கு காங்கிரஸ் எம்பிக்களுக்கு எதிராக புகார் கொடுத்தனர். இது தவிர மக்களவைத் தலைவரை சந்தித்தும் அவர்கள் புகார் கொடுத்தனர்.