ஹைதராபாத்:தெலங்கானாவில் கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர் மழையையொட்டி இன்று (செப்டம்பர் 1) தெலங்கானாவின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் உள்ளிட்ட எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.
அதேபோல், ஆந்திராவின் விஜயவாடா, குண்டூர் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் இடைவிடாத மழை பெய்து வருகிறது. இதனால் அங்கும் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக, தெலங்கானா மற்றும் ஆந்திரா கனமழையால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆந்திரா - தெலங்கானாக்கிடையே ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
முன்னதாக, ஆறு ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. 12713 விஜயவாடா - செகந்திராபாத், 12714 செகந்திராபாத் - விஜயவாடா, 17201 குண்டூர் - செகந்திராபாத், 17233 செகந்திராபாத் - சிர்பூர் காகஸ்நகர், 12706 செகந்திராபாத் - குண்டூர், 12705 குண்டூர் - செகந்திராபாத் ஆகிய ஆர் ரயில் சேவைகள் ரத்தாகின. இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக ரயில்வே உதவி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது. ஹைதராபாத் - 27781500, வாரங்கல் - 27782751, காசிபேட் - 27782660, கம்மன் - 27782885.
இத்தகையச் சூழலில், ஆந்திர மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாரா லோகேஷ், இன்று மங்களகிரி தொகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, அரசு மேற்கொண்டுள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார்.