ஜெய்ப்பூர்: ராஜஸ்தானை சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் ஒருவர், அயோத்தி ராமர் கோயில் திறப்பை குறிக்கும் வகையில் பென்சில் கார்பன் மொட்டில் ராமரின் உருவத்தை செதுக்கி ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
நாளை (ஜன. 22) அயோத்தி ராமர் கோயில் விழா பிரதிஷ்டை கோலாகலமாக நடைபெற உள்ளது. ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலமே திருவிழாக் கோலம் பூண்டு உள்ளது. கோயில் திறப்புக்கான பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், பல்துறை கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
முன்னதாக அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவுக்கு உலகெங்கும் உள்ள பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை வழங்கி வருகின்றனர். பொன், பொருள் என தங்களுக்கு இயன்றதை உலகம் முழுவதும் உள்ள மக்கள் தருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ராஜஸ்தானை சேர்ந்த சிற்ப கலைஞர் பென்சில் கார்பனில் வெறும் 1 புள்ளி 3 சென்டி மீட்டர் நீளமே ஆன மிகச் சிறிய மினியேச்சர் ராமர் உருவத்தை செதுக்கி உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அடுத்த மகேஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நவரத்ன பிரஜபதி. கின்னஸ் சாதனையாளரான பிரஜபதி, 1 புள்ளி 3 சென்டி மீட்டர் அளவிலான பென்சில் ராமர் சிலையின் மினியேச்சரை செதுக்கி ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த கேஸ்தாராவுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார்.
இந்த மினியேச்சர் ராமர் உருவம், விரைவில் அயோத்தி ராமர் அருங்காட்சியகத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு பிரஜபதி சிறிய மரக் கட்டையை கொண்டு 1 புள்ளி 6 மில்லி மீட்டர் அளவிலான மர ஸ்பூனை உருவாக்கி சாதனை படைத்தார்.
இதற்கு முன் விநாயகர், மகாவீர் சுவாமி, மஹரன பிரதாப், வல்லபாய் பட்டேல், மகாத்மா காந்தி, பீமாராவ் அம்பேத்கர், பிரதமர் மோடி ஆகியோரின் உருவத்தை பென்சில் டிப்பில் மினியேச்சராக பிரஜபதி செதுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மேற்கு வங்கத்தை சேர்ந்த புஸ்கர், அஜெய் ராவத், 25 அடி உயரம் மற்றும் 30 அடி அகலத்தில் அயோத்தி ராமர் கோயிலை பிரதிபலிக்கும் வகையில் பிஸ்கெட்டால் சிலை உருவாக்கி ஆச்சரியப்பட வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :ஆப்கானிஸ்தானில் இந்திய விமானம் விபத்து? டிஜிசிஏ விளக்கம் என்ன?