தமிழ்நாடு

tamil nadu

மத்திய பட்ஜெட் எதிரொலியால் விலை குறைய, அதிகரிக்க உள்ள பொருட்கள்? - budget 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 3:50 PM IST

தங்கம் மற்றும் செல்ஃபோனுக்கான சுங்க வரி குறைக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இவற்றின் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோப்புப் படம்
கோப்புப் படம் (GFX - ETV Bharat Tamil Nadu)

டெல்லி: 2024 - 2025 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஏழாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு துறைகள் சார்ந்த பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவற்றில் முக்கியமாக, தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும், இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அவர் அதிரடியாக அறிவித்தார். நிதியமைச்சரின் இந்த அறிவிப்பு அனைத்து தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியது.

விலை குறைய வாய்ப்புள்ள பொருட்கள்:

தங்கம், வெள்ளி:தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி அதிரடியாக குறைக்கப்படுவதால், அனைத்து தரப்பு மக்களின் விருப்பமாக உள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரங்களின் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்புக்கேற்ப, இன்று மாலை நேர வர்த்தகப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் ஒரு சவரனுக்கு 2,200 ரூபாய் குறைந்துள்ளது.

பிளாட்டினம்:பிளாட்டினம் மீதான சுங்க வரியும் 6.5 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிளாட்டினம் நகைகளின் விலையும் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. தங்கம் உள்ளிட்டவற்றின் சுங்க வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியான உடனே, மும்பை பங்கு சந்தையில் பிரபல தங்க நகை விற்பனை நிறுவனங்களின் பங்குகள் விலை இன்று அதிரடியாக உயர்ந்தது.

செல்ஃபோன்:இதேபோன்று, செல்ஃபோன் மற்றும் செல்ஃபோன் சார்ஜர்களுக்கான சுங்க வரி 15 சதவீதமாக குறைக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்றைய நவீன உலகில் அனைத்து வயதினரின் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்ட செல்ஃபோன்களின் விலையும் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீவனங்கள்:மேலும், இறால் மற்றும் மீன் தீவனங்களுக்கான சுங்க வரி 5 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும் மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், இத்தீவனங்களின் விலை குறையும் என்பதுடன், நாடு முழுவதும் இறால் மற்றும் மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கானோர் பயனடைவர் என்று கருதப்படுகிறது.

புற்றுநோய் மருந்து:அத்துடன், புற்றுநோய் சிகிச்சைக்கான குறிப்பிட்ட மூன்று மருந்துகளுக்கு இறக்குமதி வரியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக, புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் விலையும் குறைய வாய்ப்புள்ளது.

சுங்க வரி குறைக்க பரிந்துரை:இதேபோன்று, சூரிய மின் சக்தி உற்பத்தி சாதனங்கள் மீதான சுங்க வரியை மேற்கொண்டு உயர்த்த வேண்டாம் என்று மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சர் தமது பட்ஜெட்டில் அறிவுறுத்தியுள்ளார். இதேபோன்று தோல் உற்பத்தி பொருட்கள் மற்றும் காலணிகளுக்கான சுங்கக் கட்டணத்தை குறைக்கவும் பட்ஜெட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

25 கனிமங்களுக்கு வரி விலக்கு?: அணு சக்தி, புதுபிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளி, பாதுகாப்பு, தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் பயன்படும் லித்தியம், தாமிரம், கோபால்ட் உள்ளிட்ட 25 கனிமங்களுக்கு சுங்க வரியிலிருந்து முற்றிலும் வரி விலக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இத்துறைகள் சார்ந்த பல்வேறு உற்பத்தி பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

விலை அதிகரிக்க வாய்ப்புள்ள பொருட்கள்:

தொலைதொடர்பு துறையில் முக்கியமாக பயன்படும் மதர்போர்டு மீதான இறக்குமதி வரி 5 சதவீதம் உயர்த்தப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமோனியம் நைட்ரேட், மக்காத பிளாஸ்டிக் ஆகியவற்றின் மீதான சுங்க வரியும் 10 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது.

இறக்குமதி செய்யப்படும் தொலைத்தொடர்பு சாதனங்களுக்கான சுங்க வரி, 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது.

சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்கும் பிவிசி ஃபிளக்ஸ் பேனர்களின் பயன்பாட்டை குறைக்கும் நோக்கிலும், இவற்றின் இறக்குமதியை குறைக்கும் விதத்திலும் இவற்றுக்கான சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரிக்க மத்திய பட்ஜெட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவற்றின் காரணமாக, இறக்குமதி மற்றும் சுங்க கட்டணம் உயர்த்தப்படும் மூலப்பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - மத்திய பட்ஜெட் 2024: நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details