ஐதராபாத் : நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது. அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்த நிலையில், வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் அனல் பறக்க பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மக்களவை தேர்தலில் வேட்பாளர்கள் அதிகபட்சம் 95 லட்ச ரூபாய் வரை செலவழிக்க தேர்தல் ஆணையம் அனுமதித்து உள்ளது.
அதேநேரம் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்ப இந்த தொகையில் தேர்தல் ஆணையம் மாற்றம் அறிவித்து உள்ளது. இந்நிலையில், வேட்பாளர் தங்கள் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் பொருட்களின் அதிகபட்ச விலை விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.
இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப அதன் விலைப் பட்டியலில் தேர்தல் ஆணையம் மாற்றம் கொண்டு வந்து உள்ளது. அதன்படி, தமிழகத்தில் டீ-க்கு 10 ரூபாயும், காபிக்கு 20 ரூபாயும், சிக்கன் பிரியாணிக்கு 180 ரூபாயும் தேர்தல் ஆணையம் விலை நிர்ணயம் செய்து உள்ளது. மற்றபடி வேட்பாளர்கள் கட்சி உறுப்பினர்கள் தங்கும் விடுதிக்கான வாடகை, பிரசார வாகனம், பிராசார மேடை அமைப்பதற்கான பணிகள் உள்ளிட்ட ஒவ்வொரு பணிகளுக்கும் தேர்தல் ஆணையம் தனித் தனியாக விலை நிர்ணயம் செய்து உள்ளது.
இதில் உணவுப் பட்டியலில் ஒவ்வொரு மாநிலங்களின் விலைவாசிக்கேற்ப விலைப் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டு உள்ளது. உதாரணத்திற்கு சைவ உணவு ரூ.100, அசைவ உணவு ரூ.175, தயிர் சாதம் உள்ளிட்ட கலவை சாதத்துக்கு ரூ.40, முட்டை பிரியாணி ரூ.100, கோழி பிரியாணி ரூ.150, மட்டன் பிரியாணி ரூ.200, பிளைன் பிரியாணி ரூ.100, வெஜ் பிரியாணி ரூ.70, டீ, காபி ரூ.15, குளிர்பானம் ரூ.30, மினரல் வாட்டர் ரூ.20 என தனித் தனியாக விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
பஞ்சாபின் ஜலந்தரில் ஒரு கப் டீ, சமோசாவுக்கு தலா ரூ.15, சோலா பதூர் ரூ.40 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் கோழி மற்றும் ஆட்டிறைச்சி முறையே கிலோ ரூ.250 மற்றும் ரூ.500 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், மத்திய பிரதேசத்தின் மாண்டிலாவில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு கப் டீ-க்கு ரூ.7ம், சமோசாவுக்கு ரூ.7.50 காசும் செலவு செய்தால் போதும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இப்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித் தனியாக தேர்தல் ஆணையம் விலைப்பட்டியலை வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :"கச்சத்தீவை தாரைவார்த்த காங்கிரஸ்... ஒருபோதும் நம்ப முடியாத கட்சி காங்கிரஸ்" - பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு! - Katchatheevu Issue