பாட்னா:மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமித் ஷாவுக்கு, பைத்தியம் பிடித்துவிட்டது என்றும், அவர் அரசியலை விட்டு வெளியேற வேண்டும் என்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சாடியுள்ளார்.
மாநிலங்களவையில், அரசியல் சாசனம் மீதான விவாதத்தின் போது, பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, '' இப்போது அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது பேஷன் ஆகிவிட்டது.. அதற்கு பதிலாக கடவுள் பெயரை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்'' என்றார். அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு அரசியல் அரங்கிலும், அம்பேத்கர் கொள்கையை பின்பற்றுபவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், பீகாரின் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், '' அமித் ஷாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. அவர் அரசியலை விட்டு வெளியேற வேண்டும். அம்பேத்கர் மீது அமித் ஷாவுக்கு வெறுப்பு இருந்திருக்க வேண்டும். அவருடைய இந்த பைத்தியக்காரத்தனமான பேச்சை நாங்கள் கண்டிக்கிறோம்'' என்றார்.
இதையும் படிங்க:மும்பை கடலில் திடீர் விபத்து.. பயணிகள் கப்பல் மூழ்கியதில் 13 பேர் பலி..பிரதமர் மோடி இரங்கல்!
முன்னதாக, பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கடுமையாக விமர்சித்து, அவரும் அவரது கட்சியும் அரசியலமைப்புக்கு எதிரானவர்கள் என்று குற்றம் சாட்டினார்.
தேஜஸ்வி யாதவ் கூறுகையில், "பாபாசாகேப் அம்பேத்கர் எங்களின் ஊக்கமும் உத்வேகமும் ஆவார். அம்பேத்கரை யாரும் அவமதிக்க அனுமதிக்க மாட்டோம். வெறுப்பைப் பரப்பும் இவர்கள் அரசியல் சட்டத்திற்கு எதிரானவர்கள். பாராளுமன்றத்தில் அமித் ஷா பயன்படுத்திய வார்த்தைகள் கண்டிக்கத்தக்கது" என்றார்.
காங்கிரஸ் எம்.பி கே. சுரேஷ் , ''நேற்றும் அமித்ஷாவுக்கு எதிராக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தின் போது அவர் கருத்து தெரிவித்ததால், நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அம்பேத்கர் தொடர்பான உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களால் மக்களவை மற்றும் மாநிலங்களவை நேற்று (புதன்கிழமை) ஒத்திவைக்கப்பட்டன . அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற பாஜக தலைவர்கள் ராஜினாமா செய்ய காங்கிரஸ் கோரியதால் இந்த விவகாரம் பெரும் அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது'' என்றார்.