புதுடெல்லி: நடப்பாண்டில் மே மாதம் வரை, விமானங்களின் தாமதமான வருகையால் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மோஹல் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அதில், "நடப்பாண்டில் மே மாதம் வரை, பல்வேறு காரணங்களால் விமானங்களின் வருகை தாமதமானதால், மொத்தம் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு விமான நிலையங்களில் உரிய வசதிகள் செய்து தருவதற்கு மொத்தம் 13 கோடி ரூபாயை விமான போக்குவரத்து நிறுவனங்கள் செலவிட்டுள்ளன.
இதுவே, 2023 ஆம் ஆண்டு, பல்வேறு காரணங்களால் விமானங்களில் வருகை தாமதமானதால், மொத்தம் 22.51 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களின் வசதி்க்காக, மொத்தம் 26.53 கோடி ரூபாயை விமான நிலையங்கள் செலவிட்டன" என்று அமைச்சர் தமது பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும், "2020, 2021, 2022 ஆண்டுகளில் முறையே 2.06 லட்சம், 8.03 லட்சம், 14.83 லட்சம் பயணிகள், விமானங்களின் வருகை தாமதத்தால் பாதிப்புக்கு ஆளானார்கள்" என்றும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
"விமானப் போக்குரத்து பொது இயக்குரகத்தால் (DGCA) ஒப்புதல் அளிக்கப்பட்ட பயண நேர அட்டவணைப்படியே உள்ளூர் விமான போக்குவரத்து நிறுவனங்கள் விமானங்களை இயக்குகின்றன. இருப்பினும் காலநிலை, தொழில்நுட்ப, நிர்வாக ரீதியான காரணங்கள் உட்பட பல்வேறு காரணங்களால், விமானங்களை இயக்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது" என்றும் அமைச்சர் முரளிதர் மோஹல் நாடாளுமன்ற மக்களவையில் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நாடாளுமன்றத்தில் ஒலித்த கப்பலூர் டோல்கேட் விவகாரம்.. எம்.பி மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்!