ஸ்ரீநகர்: லடாக் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே தெளலத் [பெக் ஒல்டி பகுதியில் இந்திய ராணுவத்தின் T-72 tank வாகனம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாங்ஸ்டே நோக்கி இந்திய ராணுவத்தின் வாகனம் சென்று கொண்டு இருந்த நிலையில் மந்திர் மோர்க் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் ராணுவ வாகனம் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அதில் பயணித்த 5 வீரர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்கள் ஜூனியர் கமிஷன்டு அதிகாரி மற்றும் 4 வீரர்கள் என இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது. விபத்து நடந்த இடத்தில் இருந்து முழுத் தகவலும் கிடைத்த பின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வீரர்கள் யாரென்று அறிக்கை வெளியிடப்படும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் தான் கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்லக் கூடிய பாதையில் அதிகாலை மூன்று மணி அளவில் விபத்து அரங்கேறியதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "லடாக்கில் ஆற்றின் குறுக்கே கடக்கும் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் நமது துணிச்சலான இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேர் உயிரிழந்தது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.