தமிழ்நாடு

tamil nadu

அந்நிய செலாவணி முறைகேடு வழக்கு - திரிணாமுல் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு மீண்டும் சம்மன்! - ED Summon Mahua Moitra

Mahua Moitra: நாடளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற வழக்கில் முன்னாள் திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 3:12 PM IST

Published : Mar 27, 2024, 3:12 PM IST

Mahua Moitra
Mahua Moitra

டெல்லி : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக பதியப்பட்ட பண மோசடி வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ரா விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 3வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது. மார்ச் 28ஆம் தேதி (நாளை) டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

முன்னதாக பிப்ரவரி 19 மற்றும் மார்ச் 11 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களை மஹுவா மொய்த்ரா புறக்கணித்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றது தொடர்பாக அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் மஹுவா மொய்த்ராவிடம் அமலக்காத்துறை விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளது.

முன்னதாக மத்திய மாநில அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் லோக்பால் அமைப்பின் பரிந்துரையின் பேரில் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ரா தொடர்புடைய வழக்கில் சிபிஐ முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளது.

அதைத் தொடர்ந்து மஹுவா மொய்த்ரர வீடு உள்ளிட்ட கொல்கத்தாவில் அவர் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக கூறி சிபிஐ அளித்த பரிந்துரையை தொடர்ந்து அமலாக்கத்துறை தனது விசாரணையை துவக்கி இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமம் குறித்து கேள்வி எழுப்ப திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா துபாயை சேர்ந்த தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் பணம் பெற்றதாக பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரில் மக்களவை ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்த சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

இதுகுறித்து விசாரணை நடத்தி மக்களவை ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை அளித்தது. இந்த விவகாரத்தில் மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி பறிக்கப்பட்டது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக மஹுவா மொய்த்ரா தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தனது எம்பி பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். எதிர்வரும் மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிட மஹுவா மொய்த்ராவுக்கு திரினாமுல் காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :மைக்ரோசாப்ட் விண்டோஸ் - சர்பேஸ் டீம்ஸ் தலைவராக சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் நியமனம்! யார் அவர்? - Pavan Davuluri

ABOUT THE AUTHOR

...view details