பதேபுர்: உத்தர பிரதேச மாநிலம் பதேபுர் மாவட்டம் சவுன்ரா கிராமத்தை சேர்ந்தவர் விகாஷ் துபே. 24 வயதான விகாஷ் துபே கடந்த 40 நாட்களில் 7 முறை தன்னை பாம்பு கடித்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதியானார். மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் தன்னை பாம்பு கடிப்பதாகவும் 9வது முறை தன்னை பாம்பு கடிக்கும் போது தான் இறந்துவிடுவேன் என்றும் கூறி பீதியை கிளப்பினார்.
இந்நிலையில், விகாஷ் துபேயின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதுகுறித்து விசாரிக்க உத்தர பிரதேச சுகாதாரத்துறை விசாரிக்க குழு அமைத்தது. அதன்படி மூன்று மருத்துவர்கள் கொண்டு குழு இந்த சம்பவ குறித்து விசாரிக்க சுகாதாரத்துறையால் நியமிக்கப்பட்டது.
அவர்கள் விகாஷ் துபே சிகிச்சை பெற்றுக் கொண்ட பதேபுர் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். விகாஷ் துபே பாம்பு கடித்ததாக அனுமதிக்கப்பட்ட ஒவ்வொறு முறையும் அவருக்கு பாம்பு கடிக்கான விஷமுறிவு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் விஷமுறிவு மருந்து அவருக்கு செலுத்தப்பட்டு காப்பாற்றப்பட்டதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், பாம்பு கடித்து ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் மற்றொருவரின் காயத்தையும், விகாஷ் துபேயின் பாம்பு கடி தடத்தையும் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர். இதனிடையே, வனத்துறையினர் விகாஷ் துபேயின் வீடு மற்றும் அவர் சிகிச்சை பெற்றுக் கொண்ட மருத்துவமனை பகுதியில் பாம்பு நடமாட்டத்திற்கான அறிகுறிகள் உள்ளதா என ஆய்வு நடத்தினர்.