புதுச்சேரி: விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மக்கள் விரோத மத்திய பாஜக அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை இன்று(பிப்.16) நடத்தின. மத்திய அரசைக் கண்டித்து புதுச்சேரியில் திமுகவின் மாநில தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் தலைமையில் ஊர்வலம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊர்வலத்தில் பங்கேற்க புதுச்சேரியின் பல்வேறு தொகுதிகளில் இருந்து அணி அணியாக தொமுச நிர்வாகிகள், திமுகவின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் தாவரவியல் பூங்கா முன்பு திரண்டனர்.
அங்கிருந்து தொழிலாளர் முன்னேற்றக் சங்க கவுரவ தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா தலைமையில் ஊர்வலமாகப் புறப்பட்டனர். ஊர்வலம் அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சென்று ஆம்பூர் சாலையில் நிறைவடைந்தது. அங்கு மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இது குறித்து எதிர்கட்சித் தலைவர் சிவா கூறுகையில், "பெஸ்ட் புதுச்சேரியாக்குவோம் என பிரதமர் மோடி வாக்குறுதியளித்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுவைக்கு சுயாட்சி தருவோம் என்றும், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் புதுவை கடன்களை தள்ளுபடி செய்வோம் என்றும் கூறினர். ஆனால் ஒன்றுகூட நடடைபெறவில்லை. துறைமுகம், விமான நிலையத்தை விரிவாக்குவோம், சுற்றுலாவை பெருக்குவோம் என கூறினர். ஆனால், துறைமுகத்தை தனியாருக்கு விற்பனை செய்துள்ளனர். பிற மாநிலங்களில் செய்வதைக்கூட புதுவையில் செய்யவில்லை. பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன்கடைகள் இயங்குகிறது.
பிரதமரே ரேஷன்கடைகள் மூலம் பொருட்களை விநியோகம் செய்வதாக புகைப்படம் வெளியாகிறது. நாம் இந்தியாவில் இல்லை, வெளிநாட்டில் வாழ்வதாக நினைக்க வேண்டியுள்ளது. எத்தனையோ முறை புதுவை ஆட்சியாளர்கள் ரேஷன் கடைகளை திறக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர். மத்திய பாஜக அரசுக்கு இந்த கோரிக்கையை நிறைவேற்ற மனசில்லை. தமிழகத்தில் பல லட்சம் கோடி ஜிஎஸ்டி வரியாக பெறுகின்றனர். அதில் 21 சதவீதம்தான் திருப்பி தருகின்றனர். புதுவையில் பெறக்கூடிய ஜிஎஸ்டி வரியையும் திருப்பி அளிப்பதில்லை. இதனால் மாநில வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு பணி வழங்குவோம் என்றனர். 3 ஆண்டில் ஆயிரம் பேருக்குக்கூட வேலை வழங்கவில்லை.