டெல்லி:டெல்லி: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்காததை கண்டித்தும், வெள்ள நிவாரணம் வழங்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் கறுப்பு நிற ஆடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், கேரள இடதுசாரி உறுப்பினர்களும் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதன்படி, திமுக மக்களவை உறுப்பினரும், அக்கட்சியின் நாடாளுமன்றத் தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் கறுப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து டி.ஆர்.பாலு கூறுகையில், “தலைநகரில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்பிக்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
அது மட்டுமல்லாமல், தமிழகத்தில் 2023 டிசம்பரில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்ட 37 ஆயிரம் கோடி நிவாரண நிதி தொடர்பாக எந்த அறிவிப்பும் மத்திய இடைக்கால பட்ஜெட்டில் இல்லை என்றும், அதேநேரம், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் உள்பட தமிழ்நாட்டின் எந்தவொரு வளர்ச்சித் திட்டங்களுக்குமான நிதி எதுவும் மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை என்றும் திமுக குற்றம் சாட்டி உள்ளது.
மேலும், கேரளாவின் இடதுசாரி கட்சி எம்பிக்களும், டெல்லியில் மத்திய அரசின் நிதிப் பகிர்வு பாகுபாடு மற்றும் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாக, பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த கேரள இடதுசாரி எம்பிக்களுடன் நடைபெறும் போராட்டமானது, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகிய இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக, மத்திய பாஜக அரசு, பலவீனமான கூட்டுறவு கூட்டாட்சியின் அடிப்படையில் வேலை செய்து வருவதாக குற்றம் சாட்டி இருந்தார். மேலும், வரிப் பகிர்வு மற்றும் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்குவதில் மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் தரப்பில் நேற்று, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு உரையாற்றினர்.
மேலும், கடந்த ஜனவரி 31 அன்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், பிப்ரவரி 1 அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸை கடுமையாக சாடினார். அதேபோல், மாநிலங்களில் நிதிப் பகிர்வு குறித்த குற்றச்சாட்டுக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் மறுப்பு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"இடஒதுக்கீட்டை தீர்க்கமாக எதிர்த்தவர் முன்னாள் பிரதமர் நேரு" - பிரதமர் மோடி!