தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தீபாவளி 2024: 25 லட்ச தீபங்கள்; இரண்டு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்திய அயோத்தி!

தீபாவளியை முன்னிட்டு, அயோத்தி சரயூ நதிக்கரையில் 25 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றபட்டதற்காக, இரண்டு கின்னஸ் உலக சாதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

up ayodhya sets guinness world records with 25 lakh diyas
இரண்டு கின்னஸ் சாதனைகளைப் படைத்த அயோத்தி நிகழ்வு. (ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2024, 8:29 AM IST

அயோத்தி: உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் நேற்று (அக்டோபர் 30) மாலை நடைபெற்ற எட்டாவது தீபத் திருவிழாவில், 25 லட்சம் மண் அகல் விளக்குகள் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்டு இரண்டு கின்னஸ் உலக சாதனைகள் படைக்கப்பட்டன.

சரயூ நதிக் கரையில் உள்ள ராம் கி பைடி உள்பட 55 படித்துறைகளில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. 25 லட்சத்திற்கும் அதிகமான மண் அகல் விளக்குகள் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்டதும், 1,121 வேதாச்சாரியர்கள் ஒரே நேரத்தில் ஆரத்தி எடுத்ததும் தான் கின்னஸ் உலக சாதனை பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. இங்கு ஏற்றப்பட்ட விளக்குகள் ட்ரோன்கள் உதவியுடன் எண்ணப்பட்டன.

சரயூ நதிக்கரையில் தீபவிளக்கேற்றும் பக்தர்கள். (ANI)

கின்னஸ் உலக சாதனைக்கான நடுவரான பிரவீன் படேல், கின்னஸ் ஆலோசகர் நிஷ்சல் பரோட்டுடன் அயோத்திக்கு நேரில் சென்று இதனை சரிபார்த்து புதிய கின்னஸ் உலக சாதனைகளை அறிவித்தார்.

இதுகுறித்து பேசிய படேல், "மொத்தம் 1,121 பேருடன், உத்தரப் பிரதேச சுற்றுலாத் துறை, அயோத்தி மாவட்ட நிர்வாகம், சரயூ ஆரத்தி சமிதி ஆகியோர் இணைந்து ஒரே நேரத்தில் ஆரத்தி எடுத்ததற்காக கின்னஸ் உலக சாதனை பட்டத்தை வென்றுள்ளீர்கள். வாழ்த்துகள்," என்று தெரிவித்தார்.

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் தீபோத்சவ் விழாவின் போது ஆரத்தி எடுத்த காட்சி. (ANI)

இரண்டாவது சாதனையைக் குறித்து கின்னஸ் நடுவர் கூறுகையில், "மொத்தம் 25,12,585, அதாவது 25 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் எரியும் மண் அகல் விளக்குகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதுவும் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது," என்று உறுதி செய்தார்.

ஒரே நேரத்தில் அதிகமான நபர்கள் கூடி ஆரத்தி எடுப்பதும், அதிகமான மண் அகல் விளக்குகளை எரியவிட்டுக் காட்சிப்படுத்துவதும் இதுவே முதல் முறை என பிரவீன் படேல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதிலும், அதிகபட்சமான நபர்கள் ஒரே நேரத்தில் ஆரத்தி எடுத்து சாதனை படைத்துள்ளது, வித்தியாச முயற்சியாகப் பார்க்கப்படுகிறது என்றார்.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு அயோத்தியில் நிகழ்த்தப்பட்ட வானவேடிக்கை (ANI)

2023ஆம் ஆண்டு நடந்த தீப உற்சவத்தின் போது, 22லட்சத்து 23ஆயிரத்து 676 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, முந்தைய சாதனைப் பட்டியலில் இதே போன்ற நிகழ்வு இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ராம் மனோகர் லோகியா அவத் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் மற்றும் அதன் இணைக்கப்பட்ட கல்லூரிகள், இடைநிலைக் கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சாதுக்கள், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள், உள்ளூர் நிர்வாகம், சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகம் போன்றவை இந்த சாதனையை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்ததாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் (நடுவில்), ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் (வலது), துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் (இடது) (ANI)

ட்ரோன் கணக்கீடுகளுக்குப் பிறகு கின்னஸ் உலக சாதனை பிரதிநிதியால் இந்த சாதனை உறுதிப்படுத்தப்பட்டது. கின்னஸ் உலக சாதனை சான்றிதழைப் பெற்ற முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அயோத்திக்கும், மாநிலத்திற்கும், தேசத்திற்கும் "இந்த மறக்க முடியாத சாதனைக்காக" மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அயோத்தியில் 2024 தீபோத்சவ் நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட லேசர் ஷோவின் ஒரு பார்வை (ANI)

தீப உற்சவத்தின் கொண்டாட்டமானது பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. அதன்படி, 2017-ஆம் ஆண்டில் 1.71 லட்சம் விளக்குகள், 2018-இல் 3.01 லட்சம், 2019-இல் 4.04 லட்சம், 2020-இல் 6.06 லட்சம், 2021-இல் 9.41 லட்சம், 2022-இல் 15.76 லட்சம், 2023-இல் 22.23 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details