டெல்லி:தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில், மத்திய டெல்லியில் உள்ள பழைய ராஜேந்திரா நகர் பகுதியில் இயங்கி வரும் ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் கீழ் தளத்தில் வெள்ள நீர் புகுந்தது. யுபிஎஸ்சி தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்த மாணவர்கள் வெள்ள நீரை கண்டு அதிர்ச்சி அடைந்து பயிற்சி மையத்தை விட்டு வெளியேற முயற்சித்து உள்ளனர்.
அதற்குள் பயிற்சி மையம் முழுவதும் வெள்ள நீர் சூழந்து கொண்டதாக கூறப்படுகிறது. பயிற்சி மையத்தை வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது குறித்து மாலை 6.40 மணிக்கு போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு சக மாணவர்கள் தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், காவல் துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் இரவு 9 மணிக்கு சம்பவ இடத்திற்கு மீட்பு பணிக்கு வந்ததாக சொல்லப்படுகிறது.
அதற்குள் பயிற்சி மையம் முழுவதும் மழை நீர் நிரம்பி வெள்ளக்காடாக மாறியுள்ளது. வெறும் 10 நிமிடங்களில் பயிற்சி மையத்தின் தரைதளம் மூழ்கியதாக மாணவர்கள் கூறுகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் பயிற்சி மையத்தில் புகுந்த நீரை மோட்ர் மூலம் உறிஞ்சு எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர் மீட்பு பணியில் மூன்று மாணவர்களின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. இரண்டு மாணவிகள் உள்பட மூவரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசர் அனுப்பி வைத்தனர். மேலும் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 14 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.