டெல்லி: தீபாவளி திருநாளான இன்று பட்டாசு வெடிப்பை அளவிலா ஆனந்த செயலாக செய்து வரும் இவ்வேளையில், நாம் அனைவரும் அறிய வேண்டிய மறுபக்கமாக காற்று மாசுபாடு இருந்து வருகிறது. இன்று அதிகாலை முதல் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகள் அடர்த்தியான புகை மூட்டத்தால் மூடப்பட்டு காணப்படுகிறது. காற்றின் தரம் மேலும் குறைந்து, காற்றுத் தரக் குறியீடு (AQI) மிக அபாயமான நிலையை எட்டியுள்ளது. இது பலரின் உடல்நலத்தை கவலைக்கிடமாக மாற்றக்கூடியதாகும்.
தீபாவளிக்கு முன்தைய நாளான நேற்று 'சோட்டி தீபாவளி' கொண்டாப்பட்டதை அடுத்து, டெல்லியின் 27 பகுதிகளில் காற்றின் தரம் 'மிகவும் மோசமான' பிரிவில் இருந்து, அபாயகரமான காற்று மாசு சூழலுக்குச் சென்றுள்ளது. அதாவது, தற்போது டெல்லியின் ஆனந்த் விஹாரில் காற்று தரக் குறியீடு அதிகபட்சமாக AQI 418-ஐ எட்டியதுடன், 11 பகுதிகளில் AQI 300க்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்றின் தரம்:
- அலிபூர்: 326
- ஆனந்த் விஹார்: 420
- அசோக் விஹார்: 370
- IGI விமான நிலையம்: 303
- ஜஹாங்கிர்புரி: 391
- வஜிர்பூர்: 398
இதேபோல், காசியாபாத், நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் மாசு அளவு அதிகரித்துள்ளது. காசியாபாத்தின் இந்திராபுரத்தில் 271 ஆகவும், நொய்டா 62 செக்டாரில் இருந்து 284 ஆகவும் அதிகரித்து பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டும் இந்த ஆண்டும்:டெல்லியில் காற்றின் தரம் பல ஆண்டுகளாக மோசமடைந்து வருகிறது. கடந்த ஆண்டு AQI 220 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு அதாவது நேற்றைய தினத்தில் இருந்து AQI 307-ஐ எட்டியுள்ளது. இதுவே கடந்த 2020-ல் 296 ஆகவும், 2021-ல் 314 ஆகவும், 2022-ல் 259 AQI இருந்தது குறிப்பிடத்தக்கது.