தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முதலமைச்சர் பொறுப்பில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி - டெல்லி உயர்நீதிமன்றம்! - arvind kejriwal - ARVIND KEJRIWAL

சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய பொது நல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 3:17 PM IST

டெல்லி :மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அங்கிருந்தபடியே அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பித்து வருகிறார். இந்நிலையில், சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் மாநில அரசின் அதிகார வரம்புக்குள் நீதித்துறை தலையீடு என்பது அப்பாற்ப்பட்டது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை நீடிக்கக் கோரி டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடி உள்ளது. அதேநேரம் தனது கைது அரசியல் சதித்திட்டம் என்றும் அதற்கு டெல்லி மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.

கடந்த மார்ச் 21ஆம் தேதி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்த அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. சிறையில் இருந்து கொண்டே அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியை வழிநடத்துவார் எனக் ஆம் ஆத்மி அரசு தரப்பில் கூறப்பட்ட நிலையில், டெல்லி அரசு சிறையில் இருந்தபடி இயங்காது என துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தான் முதலமைச்சர் பொறுப்பில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முன்னதாக அமலாக்கத்துறையின் கைதை எதிர்த்தும், விசாரணை நீதிமன்றத்தின் காவல் ஆணையை எதிர்த்தும் தாக்கல் செய்த மனுவில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுக்கள் குறித்து பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :டெபாசிட் தொகையை தவணையில் செலுத்துவதாக கூறிய வேட்பாளர் - தேர்தல் அலுவலரின் நடவடிக்கை என்ன? - Mahendra Orang

ABOUT THE AUTHOR

...view details