டெல்லி:தமிழ்நாட்டில் கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம், பாரதிய பிரஜா அய்க்யாதா கட்சி (BPA) என்ற கட்சிக்கு ஒதுக்கியது, தேர்தல் ஆணையம். இதனால், கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அக்கட்சி சார்பில் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின்போது, நாம் தமிழர் கட்சி தரப்பில், "பல ஆண்டுகளாக பல தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டு இருக்கிறோம். ஆனால், இந்த முறை புதிதாக தொடங்கப்பட்ட ஏதோ ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் அந்தச் சின்னத்தை ஒதுக்கியுள்ளது" என வாதிடப்பட்டது.
பின்னர் தேர்தல் ஆணையம் தரப்பில், "இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், பிப்ரவரி 13ஆம் தேதி அந்த சின்னத்தை ஒதுக்கியது. இதில், எந்த விதிமீறலும் இல்லை. தாமதம் செய்தது நாம் தமிழர் கட்சியின் தவறு. கரும்பு விவசாயி சின்னத்தை தற்பொழுது பெற்றிருக்கக்கூடிய கட்சி, கடந்தாண்டு டிசம்பர் 17ஆம் தேதி கேட்டிருந்தார்கள். நாம் தமிழர் கட்சி பிப்ரவரி 9ஆம் தேதிதான் கேட்டார்கள். இதில், எப்படி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தை குறை கூற முடியும் என வாதத்தை முன்வைத்தனர்.