புதுடெல்லி:டெல்லியில் காற்று மாசு உச்சத்தை எட்டியுள்ளதால் இன்று (நவ.18) கிராப் - 4 எனப்படும் கடுமையான கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி இன்று முதல் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்படும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் கடந்த நாட்களாக காற்று தர குறியீட்டின் (AQI) அளவு மோசமாக பதிவாகி வருகிறது. அந்த வகையில் நேற்று (ஞாயிற்று கிழமை) காற்றின் தரம் மேலும் மோசமடைந்து 457 ஆக உயர்ந்துள்ளது. இதனால், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கிராப் - 4 (GRAP 4) எனப்படும் நான்காம் கட்ட கட்டுப்பாடு நடவடிக்கையை டெல்லியில் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
அதன்படி டில்லி அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், டெல்லியில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடம் எடுக்க வேண்டும் என்றும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது. மறு உத்தரவு வரும் வரை கிராப் 4 அமலில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வாகன கட்டுப்பாடுகள்
அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து கனரக வாகனங்களும் டெல்லிக்குள் இயங்க தடை செய்யப்பட்டுள்ளது. அதிலும், சிஎன்ஜி, எல்என்ஜி மற்றும் பிஎஸ்-4 ரக கனரக வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல, டெல்லி பதிவெண் அல்லாத எந்த வாகனங்களும் டெல்லியில் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது.