டெல்லி : டெல்லி கலால் வரி முறைகேடு வழக்கு தொடர்பாக தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே சந்திரசேகரா ராவின் மகள் மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் (பிஆர்எஸ்) எம்எல்சியுமான கவிதாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க சிறப்பு நீதிபதி அனுமதி வழங்கி உள்ளார். முன்னதாக மார்ச் 16ஆம் தேதி கவிதாவுக்கு 7 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில், மார்ச் 23ஆம் தேதி அதை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தனது மகன் பொதுத் தேர்வுக்கு தயாராகி வருவதால் அவனுடன் இருக்க அனுமதிக்கக் கோரி இடைக்கால ஜாமீனை மனுவை கவிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதேநேரம் இடைக்கால ஜாமீனை பரிசீலிக்க வேண்டும் என்றால், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஐதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் வீட்டில் கடந்த மார்ச் 15ஆம் தேதி சோதனை நடத்திய அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை முடிவில் பிஆர்எஸ் எம்எல்சி கவிதாவை கைது செய்தனர். தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.