டெல்லி : மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதித்ததை அடுத்து, நீதிமன்றத்தில் வைத்தே சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர். 3 நாட்கள் சிபிஐ காவல் நிறைவடைந்ததையடுத்து, மீண்டும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்றத்தில் சிபிஐ போலீசார் இன்று ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு டெல்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி சுனேனா ஷர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, விசாரணையின் போது அரவிந்த் கெஜ்ரிவால் ஒத்துழைக்கவில்லை என்றும், முன்னுக்குப் பின் முரணாக பதிலளிப்பதாகவும், இன்னும் சாட்சிகள் விசாரிக்கப்பட்டாமல் இருப்பதாக கூறினார். இதனைப் பதிவு செய்த நீதிபதி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்கள் வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. விசாரணை நீதிமன்றத்தின் ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்த டெல்லி உயர்நீதிமன்றம், கடந்த ஜூன் 21ஆம் தேதி வழக்கின் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது.
பின்னர், கடந்த ஜூன் 25ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்து, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதனால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிஎஸ்என்எல் ஸ்பெஷல் சிம் கார்டு! என்னென்ன வசதி இருக்கு தெரியுமா? - BSNL Special SIM Card Amarnath