டெல்லி: விவசாயக் கடன் தள்ளுபடி, விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயச் சங்கத்தினர் டெல்லியை நோக்கி பேரணி நடத்தினர். ஆனால், விவசாயிகள் டெல்லி நோக்கி செல்லாதபடி, மாநில எல்லைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. குறிப்பாக ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேச மாநில எல்லைகளில் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டது.
இதனையடுத்து, விவசாயிகள் பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையிலான எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த தடைகளை மீறி டெல்லிக்குச் செல்ல உள்ளே நுழைய விவசாயிகள் முயற்சித்தால், அவர்களை காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தின்போது விவசாயிகள் மற்றும் காவல்துறையினரிடம் ஏற்பட்ட மோதலில், காவல் துறையினர் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதில், விவசாயி ஒருவர் உயிரிழந்தார், பல விவசாயிகள் காயம் அடைந்தனர்.