பரேலி: உத்தரப் பிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டத்திற்குட்பட்ட சிரௌலி பகுதியில் நேற்று (அக்.2) நடந்த பட்டாசு ஆலை விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிரௌலி பகுதியில் நசீர் என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று அவரது பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் இருந்த கட்டிடங்களும் சேதமடைந்தன. இந்த விபத்தில் நேற்று மூன்று பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த இரண்டு பேர் இன்று உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
பட்டாசு ஆலை உரிமையாளர் நசீருக்கு வேறொரு இடத்திற்கான உரிமம் இருந்ததாகவும், ஆனால் சம்பவத்தன்று வெடிவிபத்து ஏற்பட்டது அவரது மாமியார் இல்லம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அனுமதி இல்லாத இடத்தில் நசீர் பட்டாசு தயாரித்து வந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: டெல்லி நீமா மருத்துவமனையில் மருத்துவர் சுட்டுக் கொலை.. நடந்தது என்ன?
இதற்கிடையே, சிரௌலி காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் தேஷ்ராஜ் சிங், நஹர் சிங் மற்றும் கான்ஸ்டபிள்கள் அஜய், சுரேந்திரா ஆகியோர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், காவல் அதிகாரி கௌரவ் சிங்கிற்கு எதிராக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பட்டாசு ஆலையின் உரிமமும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சையை உறுதி செய்ய சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். வெடி விபத்து குறித்து விசாரணையை முடுக்கியுள்ள போலீசார், சம்பந்தப்பட்ட ஆலையில் இருந்து சேகரிக்கப்பட்ட பட்டாசு மாதிரிகளை வைத்து அவைகளால்தான் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்