டெல்லி: மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதுவரை ஏப்ரல் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக 190 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடைபெற்று உள்ளது. தொடர்ந்து வரும் 7ஆம் தேதி மூன்றாவது கட்ட மக்களவை தேர்தல் நடைபெற உள்ளன.
பெருவாரியான தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் ரேபரலி மற்றும் அமேதி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ரேபரலி மற்றும் அமேதி தொகுதியில் ஆண்டாண்டு காலமாக காங்கிரஸ் கட்சியின் நேரு குடும்பத்தினர் மட்டுமே போட்டியிட்டு வந்தனர்.
இந்நிலையில், ரேபரலி தொகுதியில் போட்டியிட வேண்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் கடந்த 2019ஆம் ஆண்டு அமேதி மற்றும் கேரளா மாநிலம் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும், போட்டியிட்ட ராகுல் காந்தி அதில் அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணியிடம் தோல்வியை தழுவினார்.
இந்த முறை வயநாட்டில் மீண்டும் ராகுல் காந்தி களமிறங்கினார். அங்கு இரண்டாம் கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் இந்த முறை ரேபரலி மற்றும் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தரப்பில் யார் களமிறக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. பாஜகவை பொறுத்தவரை மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி மீண்டும் அமேதி தொகுதியில் களம் காணுகிறார்.
முன்னதாக ரேபரலியில் பிரியங்கா காந்தியும், அமேதியில் ராகுல் காந்தியும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே அமேதி தொகுதியில் போட்டியிட பிரியங்கா காந்தி கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேராவும் விருப்பம் தெரிவித்து இருந்தார். ரேபரலி மற்றும் அமேதி தொகுதியில் மே 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 27ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், இன்றுடன் (மே.3) நிறைவு பெறுகிறது. இதனால் இன்று காங்கிரஸ் தரப்பில் ரேபரலி மற்றும் அமேதி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பாஜக சார்பில் அமேதியில் சிட்டிங் எம்.பி ஸ்மிரிதி ராணி போட்டியிட்டாலும், ரேபரலி தொகுதிக்கான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க:தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கேசிஆர் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை - என்ன காரணம் தெரியுமா? - EC Bans KCR