புதுடெல்லி:உபியில் 2027ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்து கட்சியையும் இந்தியா கூட்டணி கட்சிகளுடனான உறவையும் வலுப்படுத்த காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது.
மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று அதீத நம்பிக்கை வைத்த காங்கிரஸ் கட்சி உண்மையில் தோல்வியை தழுவியது. எனவே ஒரு காலகட்டத்தில் உபியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் மீண்டும் அங்கு கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக 2027ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்து காங்கிரஸ் கட்சி பல திட்டங்களை தீட்டி வருகிறது. அதன் ஒரு படியாக இப்போது உபியில் கட்சியின் கட்டமைப்பை கலைத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே கடந்த 5ஆம் தேதி இரவு உத்தரபிரதேசத்தின் மொத்த கட்சியின் கட்டமைப்பையும் கலைத்தார். நடப்பு ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 80 இடங்களில் 43 தொகுதிகளை கைப்பற்றியது. எனவே, உபியில் அடுத்து 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல், 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகி வருகிறது.