தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேர்தல் விதிகளில் திருத்தம்...உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு! - AMENDMENTS TO ELECTION RULES

1961ஆம் ஆண்டின் தேர்தல் நடத்தை விதிகள் 93(2)(a) திருத்தப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

பிரதிநித்துவப்படம்
பிரதிநித்துவப்படம் (Image credits-Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2024, 7:41 PM IST

புதுடெல்லி:1961ஆம் ஆண்டின் தேர்தல் நடத்தை விதிகள் 93(2)(a) திருத்தப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

1961ஆம் ஆண்டின் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான ஆவணங்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று மெஹ்மூத் பிரச்சா என்ற வழக்கறிஞர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் அடிப்படையில் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி,அளித்த தீர்ப்பில் மனுதாரர் கோரியபடி 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான ஆவணங்களை 6 வாரங்களுக்குள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதி வினோத் எஸ் பரத்வாஜ் உத்தரவிட்டார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் (Image credits-ETV Bharat))

திருத்தம்:இந்த தீர்ப்பு வெளியான 11 நாட்கள் கழித்து 1961ஆம் ஆண்டின் தேர்தல் நடத்தை விதிகள் 93(2)(a)யில் கடந்த 20ஆம் தேதி திருத்தம் செய்து மத்திய சட்டத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. சட்டத்துறை மேற்கொண்ட திருத்தத்தின்படி 1961ஆம் ஆண்டின் தேர்தல் நடத்தை விதிகள் 93(2)(a)யின் கீழ் குறிப்பிட்ட ஆவணங்களை மட்டுமே பொதுமக்கள் பார்வையிட முடியும் என்ற மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய சட்டத்துறை தெரிவித்துள்ளது.

திருத்தத்துக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்த தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர், "இந்த திருத்தத்தின்படி தேர்தல் குறித்த ஆவணங்களை பொதுமக்கள் பார்வையிட முடியாது. அதே நேரத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைத்து ஆவணங்களையும் பார்வையிட முடியும்,"என்று தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

திமுக எதிர்ப்பு:மத்திய சட்டத்துறையின் திருத்தத்துக்கு திமுக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது குறித்து நேற்று அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தேர்தல் நடத்தை விதிகள் திருத்தம் மக்களாட்சிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் 93(2)(அ)-ல் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சி தனது மிகப்பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.

நாட்டில் சுதந்திரமான – நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதன் மீது தொடுக்கப்பட்டுள்ள மக்களாட்சிக்கு விரோதமான இந்த தாக்குதலை எதிர்க்க பாஜ தலைமையிலான ஒன்றிய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்,"என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் வழக்கு:இந்த நிலையில் இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், "தேர்தல் விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறையின் நேர்மை வேகமாக அழிந்து வருகிறது. அதை மீட்டெடுக்க உச்ச நீதிமன்றம் உதவும் என்று நம்புகிறோம். தேர்தல் ஆணையம், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு பொறுப்பான அரசியலமைப்பு அமைப்பாகும். இப்போது ஒருதலைப்பட்சமாகவும், பொது ஆலோசனையின்றி, முக்கிய சட்டத்தை திருத்துவதை அனுமதிக்க முடியாது. தேர்தல் செயல்முறையை மிகவும் வெளிப்படையானதாகவும் பொறுப்புக்கூறக்கூடியதாகவும் ஆக்கும் அத்தியாவசியத் தகவல்களுக்கான பொது அணுகலை அந்தத் திருத்தம் நீக்குகிறது,"என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details