டெல்லி:இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் சா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா அதினியம் 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இவை இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. இந்தியாவில் கடந்த 1860 முதல் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களும் அமலில் இருந்தன. இந்த நிலையில் தான் பிரதமர் மோடி தலைமையிலான கடந்த ஆட்சியில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாக்ஷியா அதினியம் ஆகிய சட்டங்கள் நாடாளுமன்றத்திய இயற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டன.
இதில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் தேசதுரோகம் என்பது நீக்கப்படு மாறாக, பிரிவினைவாதம், கிளர்ச்சி, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக தண்டனை வழங்கும் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. சிறுவர்களை கூட்டு பாலியல் உள்ளிட்ட வன்கொடுமைக்கு உள்ளாக்குதல் மற்றும் கும்பலாக அடித்து கொலை செய்வதுற்கு மரண தண்டனை வழங்கவும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பழைய சட்டங்களில் குற்றம் நடந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தான் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்படும். ஆனால், புதிய சட்டங்கள் மூலம் எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஜீரோ எப்ஐஆர் என்று பெயர் சொல்லப்பட்டுள்ளது.
அதேபோல் புதிய குற்றவியல் சட்டங்களின்படி, குற்ற வழக்குகளில் நீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நாளில் இருந்து 45 நாள்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த வழக்குகளில் முதல் நீதிமன்ற விசாரணை நடைபெற்ற நாளில் இருந்து 60 நாள்களுக்குள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.