தாண்டேவாடா:சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் மண்டலத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நேற்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நேரத்தில் 31 நக்சலைட்டுகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.
தாண்டேவாடா மற்றும் நாராயண்பூர் மாவட்ட எல்லைகளில் அமைந்துள்ள நெந்தூர், துல்துலி கிராமங்களுக்கு இடையே உள்ள வனப்பகுதியில் இந்த மோதல் நிகழ்ந்தது. இப்பகுதியில் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் (எஸ்டிஎஃப்) அடங்கிய கூட்டுக் குழுவினர் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வனப்பகுதியில் நக்சலைட்டுகள் முகாமிட்டுருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்புப் படையினர் அங்கு சென்றனர். அப்போது நக்சலைட்டுகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால், பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலை நடத்தினர்.
சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்ட 24 ஆண்டுகளில் ஒரு என்கவுன்ட்டரில் அதிக நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமாக இது அமைந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து கொல்லப்பட்ட 31 நக்சலைட்டுகளின் சடலங்களையும் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். இன்னும் தொடர்ந்து நக்சல் தேடுதல் வேட்டை நடப்பது, அங்குள்ள நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
இதையும் படிங்க:இந்தியாவில் இருந்தே கைலாய தரிசனம்: சிவபக்தர்களுக்கு நற்செய்தி; பயணத்தை திட்டமிடுவது எப்படி?
பஸ்தர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் எதிர்கொள்ளும் நக்சலைட்டுகள் அச்சுறுத்தல்கள், சவால்களையும் இந்த சம்பவம் உணர்த்துகிறது. என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திலிருந்து ஏகே-47 துப்பாக்கி, எஸ்எல்ஆர் துப்பாக்கி, இன்சாஸ் துப்பாக்கி, இலகு ரக இயந்திர துப்பாக்கி (எல்எம்ஜி) மற்றும் 303 ரக துப்பாக்கி உள்ளிட்ட கணிசமான ஆயுதங்களும் பறிமுதல் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாதுகாப்புப் படையினரின் திறமையான நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையை அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய், பாராட்டியுள்ளதுடன், நக்சல் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தனது அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். பாஜக தலைமையிலான மாநில மற்றும் மத்திய அரசுகளின் இரட்டை என்ஜின் நிர்வாகங்களின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
பஸ்தர் மண்டலத்தில் நக்சல் தேடுதல் வேட்டையானது கடந்த வியாழக்கிழமை மதியம் முதலே துவங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேடுதல் வேட்டையில் இதுவரை மொத்தம் 31 மாவோயிஸ்டுகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களின் அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஐஜி சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.
என்கவுன்டர் நடந்த இடம் இரு மாவட்டங்களின் எல்லைப் பகுதி என்பதால், கூடுதல் சிஆர்பிஎஃப் வீரர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தாண்டேவாடா, நாராயண்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பகுதியில் இந்த ஆண்டு இதுவரை நடந்த பல்வேறு என்கவுன்ட்டர்களில் மொத்தம் 188 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் "ஈடிவி பாரத்" ஊடகத்துக்கு பேட்டியளித்த அம்மாநில துணை முதல்வர் விஜய் சர்மா, "சத்தீஸ்கர் வரலாற்றில் நக்சலைட்டுகளுக்கு எதிரான மிகப்பெரிய நடவடிக்கை நேற்று நடந்துள்ளது. ராணுவ வீரர்களின் துணிச்சலுக்கும், வலிமைக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
நக்சலைட் என்கவுன்ட்டரின்போது, துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த டிஆர்ஜி படைவீரர் ராம்சந்திர யாதவ், உடனடியாக விமானம் மூலம் ராய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில துணை முதல்வர் விஜய் சர்மா, ராய்ப்பூர் மருத்துவமனைக்குச் சென்று ராம்சந்திர யாதவை சந்தித்து நலம் விசாரித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்