சத்தீஸ்கர்:இந்தியாவில் உள்ள சத்தீஸ்கர்,ஒடிசா,தெலுங்கான உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளில் நக்சல்கள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனை தடுப்பதற்காக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டால் கூட நக்சல்கள் தாக்குதல் அவ்வபோது நிகழ்ந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் சத்தீஸ்கர் பிஜாப்பூர் - சுக்மா எல்லையில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். மேலும் பாதுகாப்புப் படை வீரர்கள் 14 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த வீரர்களை விமானம் மூலம் ராய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் குறைந்தது ஆறு நக்சலைட்டுகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நக்சல்கள் நடமாட்டத்தைத் தடுத்து, மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை செய்து தரும் வகையில், பீஜப்பூர் - சுக்மா எல்லையில் உள்ள தெகல்குடெம் என்ற கிராமத்தில் புதிய பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த வீரர்கள் ஜோனகுடாவிற்கும் அலிகுடாவிற்கும் இடைப்பட்ட பகுதியே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.