சக்தி (சத்தீஸ்கர்):சத்தீஸ்கர் மாநிலம், மல்காருதா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது சப்போரா கிராமம். இங்குள்ள ஓர் வணிக வளாகத்தில் வாடகை கட்டடத்தில் எஸ்பிஐ பேரில் வங்கிக் கிளை ஒன்று கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் (செப்டம்பர் 18) செயல்பட்டு வந்துள்ளது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதத்தில் எஸ்பிஐ வங்கியின் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து வண்ணமயமான விளம்பர பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் அக்கட்டடம் முழுவதும் வியாப்பித்திருந்தது.
இந்த வங்கிக் கிளை அப்பகுதி மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த அதே வேளையில், இதன் செயல்பாடுகள் மீது பலருக்கும் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து எஸ்பிஐ வங்கியின் கோர்பா மண்டல தலைமை அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் குழு, சப்போரா கிராமத்தில் இயங்கி வந்த அலுவலகத்துக்கு சென்று நேரில் விசாரணை மேற்கொண்டது. இதில் அந்த கிளை போலியானது என்பது தெரிய வந்தது.
வங்கி நிர்வாக மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவையடுத்து, அதிகாரிகள் குழு கடந்த மாதம் 27 ஆம் தேதி சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தியதாக சக்தி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமா படேல் கூறினார். மேலும், ஐந்து பேருடன் இந்தப் போலி வங்கி கிளை இயங்கி வந்ததும் தெரிய வந்தது என்றும் காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.