புதுதில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் 1975, ஜூன் 25 ஆம் தேதி நாட்டில் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது. இந்த தினத்தை நினைவுகூரும் விதத்தில், ஆண்டுதோறும் இனி ஜூன் 25 ஆம் நாள், 'அரசியலமைப்பு படுகொலை தினமாக' அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமது எக்ஸ் வலைதளத்தில் இன்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ' 1975, ஜூன் 25 ஆம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தமது சர்வாதிகார மனநிலையை வெளிப்படுத்தும் விதத்தில் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார். ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் இந்த நடவடிக்கையின் விளைவாக, லட்சக்கணக்கானோர் எவ்வித காரணமும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊடகத்தின் குரலும் அடக்கப்பட்டது' என்று தெரிவித்துள்ளார்.