டெல்லி:பள்ளி மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் (Open Book Exam) முறையை, பரிசோதனை அடிப்படையில் சிபிஎஸ்இ (CBSE) மேற்கொள்ள உள்ளது. மாணவர்களின் நினைவாற்றலை சோதிப்பதை விட, அவர்களுக்கு பாடத்தின் மீதான புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை எடுத்துள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்வு செய்யப்பட்ட சில பள்ளிகளில், 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதக்கூடிய முறையை, பரிசோதனை அடிப்படையில் சிபிஎஸ்இ மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
9 மற்றும் 10ஆம் வகுப்பில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களையும், 11 மற்றும் 12ஆம் வகுப்பில் ஆங்கிலம், கணிதம், உயிரியல் பாடங்களையும், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும்படி பரிசோதனை மேற்கொள்ள சிபிஎஸ்இ திட்டமிட்டு உள்ளது. இந்த பரிசோதனை முயற்சி மூலம், சிபிஎஸ்இ கருத்துகளைப் பெற உள்ளது.
இந்த ஓபன் புக் தேர்விற்கு மாணவர்கள் புத்தகங்கள், வகுப்பறைக் குறிப்புகள், கையேடுகளை தேர்வுகளுக்கு எடுத்துச் சென்று, தேர்வின்போது அவற்றைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த ஓபன் புக் தேர்வின் வடிவமைப்பு, மேம்பாடு ஜூன் 2024-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 2024 நவம்பர் - டிசம்பரில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் சோதனை அடிப்படையில் மட்டும் உள்ளதாகவும், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் இந்த புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறையை செயல்படுத்தும் திட்டம் இல்லை என சிபிஎஸ்இ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 2014-2015, 2016-2017 கல்வியாண்டுகளில் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளில் ஆண்டு இறுதித் தேர்வில் Open Text Based Assessment - OTBA என்ற முறை பரிசோதிக்கப்பட்டது. பின்னர் பெறப்பட்ட எதிர்மறையான கருத்துகளால், இந்த திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தெலங்கானாவில் பெண் எம்எல்ஏ சாலை விபத்தில் உயிரிழப்பு!