ஒட்டாவா:லிபரல் கட்சி சார்பாக பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக தெரிவித்துள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரா ஆர்யா, கனடாவை இறையாண்மை மிக்க குடியரசாக மாற்றுவேன் என்றும், ஓய்வு வயது அதிகரிப்பு, குடியுரிமை அடிப்படையிலான வரி விதிப்பு உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வர உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தகுதியே அடிப்படை:கனடாவின் ஒட்டாவா எம்பியாக இருக்கும் சந்திரா ஆர்யா, இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பிறந்தவர். கடந்த 2015ஆம் ஆண்டு நேபியன் பகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் தமது முடிவு குறித்து எக்ஸ் பதிவில் அறிக்கை வெளியிட்டுள்ள சந்திரா ஆர்யா, "மன்னராட்சிக்கு மாற்றாக கனடாவை இறையாண்மை மிக்க குடியரசாக மாற்றுவேன். கனடா அதன் எதிர்காலத்தை முழு கட்டுப்பாட்டுடன் தீர்மானிப்பதற்கு இது உரிய தருணமாகும். சிறிய, தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டின் படி இல்லாத (பன்முகத்தன்மை, சம உரிமை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை )திறன் வாய்ந்தவர்களைக் கொண்ட அமைச்சரவையை முன்னெடுப்பேன். கனடாவின் அடுத்த பிரதமர் பதவிக்கு நான் போடடியிடுகின்றேன். கனடாவின் எதிர்கால தலைமுறையினருக்கான பாதுகாப்பான வளர்ச்சியை கொண்ட அரசாக இருக்கும்.
கனடாவில் பல தலைமுறைகள் இதுவரை காணத வகையில் நாம் குறிப்பிடத்தக்க கட்டமைப்பு பிரச்னைகளை எதிர் கொண்டுள்ளோம். அவை தீர்க்கப்பட வேண்டும் எனில் கடினமான விருப்பங்களை தேர்வு செய்ய வேண்டி இருக்கிறது. கனடா நாட்டவர்களுக்கு எது நன்மையை அளிக்குமோ, நமது குழந்தைகள், நமது மூதாதையர்களின் நலனுக்காகவே எப்போதும் கடினமாக நான் உழைப்பேன். தேவையான துணிச்சலான முடிவுகளை நாம்எடுக்க வேண்டும். பெரிய தீர்மானங்களை மேற்கொள்வதற்கு கனடா பயப்படவில்லை. தீர்மானங்கள் நமது பொருளாதாரத்தை மறு கட்டமைக்கும்,நம்பிக்கையை மீட்டெடுக்கும். அனைத்து கனடாவாசிகளுக்கும் சம வாய்ப்புகளை உருவாக்கும், நமது குழந்தைகள், மூதாதையர்களுக்கு பாதுகாப்பான வளர்ச்சியை கொடுப்போம்,"என்று கூறியுள்ளார்.