ஸ்ரீநகர்:வருடாந்திர அமர்நாத் புனித யாத்திரை இன்று (சனிக்கிழமை) முதல் தொடங்கி ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்துக்களின் புனித ஸ்தலங்களில் ஒன்றான அமர்நாத்துக்கு பக்தர்கள் சென்று வர ஆண்டுதோறும் 52 நாட்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரமுள்ள குகைக் கோயிலில் தோன்றும் பனி லிங்கத்தை கண்டு பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.
பஹல்கம் மற்றும் பால்டால் வழியாக முகாம்களில் இருந்து பக்தர்கள் அமர்நாத் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இன்று முதல் கட்டமாக 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் தங்கு தடையின்றி தொலைத் தொடர்பு இணைப்பு சேவைகளை பெரும் பொருட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் பிரத்யேக சிம் கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
யாத்திரை பஹல்கம், பால்டால் பகுதி வழியாக அமர்நாத் யாத்திரை மேற்கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்பம் நிலையில், அந்த பகுதியில் தங்கு தடையின்றி இணைப்பு சேவையை பெற ஏதுவாக பிரத்யேக சிம்கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட யாத்ரீகர்களுக்கு இந்த பிரத்யேக சிம்கார்டுகள் இலவசமாக வழங்கப்படும் என்றும், நுன்வான், பால்டால், ஜம்மு மற்றும் பேஸ் கேம்ப் பகுதியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் சிம் கார்டுகளை பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் 10 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த சிம் கார்டுகளை இலவசமாக பெற்றுக் கொள்ளும் பக்தர்கள், 196 ரூபாய் மதிப்பிலான பிஎஸ்என்எல் பிளானை ரீசார்ஜ் செய்து கொண்டு தங்களது யாத்திரையை தொலைத் தொடர்பு இணைப்பு வசதியுடன் மேற்கொள்ளலாம் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர் சேவை மையங்களில் தங்களது யாத்திரை ஸ்லிப் மற்றும் ஆதார் கார்டு கொடுத்து பிரத்யேக சிம் கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் 15 நிமிடங்களில் சிம் கார்டு ஆக்டிவேட் ஆன பிறகு 4ஜி வசதியுடன் கூடிய சேவையை பக்தர்கள் பெற முடியும் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு யாத்திரை முழுவதும் இந்த பிரத்யேக சிம்கார்டு வசதி பக்தர்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:லடாக்கில் வெள்ளப் பெருக்கில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் பலி! என்ன நடந்தது? - Five Soldiers dead in ladakh