தௌசா: ராஜஸ்தான் மாநிலத்தில் 150 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் இரண்டு நாட்கள் கழித்து மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் தௌசா நகரைச் சேர்ந்த தம்பதியின் 5 வயது மகன் ஆர்யன். இச்சிறுவன் கடந்த திங்கள்கிழமை (டிச.5) அன்று கலிகாட் கிராமத்தில் உள்ள வயலில் விளையாடி கொண்டிருந்தபோது அங்குள்ள 150 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான். அப்போது சிறுவனின் தாயும் அங்கிருந்ததால் இதை கண்டு அலறிய அவர் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீ அணைப்பு துறையினர் எந்திரங்களை கொண்டு சிறுவனை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சிறுவன் விழுந்த ஒரு மணி நேரம் கழித்து மீட்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், ஒரு கட்டத்தில் தேசிய மீட்பு படையினர் சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு பக்கத்தில் இயந்திரங்களைப் பயன்படுத்தி இணையான குழியை தோண்டி சிறுவனை மீட்க முயற்சி மேற்கொண்டனர்.