ரேபரேலி: உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி போட்டியிடும் நிலையில் அவருக்கு எதிராக பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேரு குடும்பத்துடன் அதிக பிணைப்பு கொண்ட ரேபரேலி தொகுதியில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தார்.
இந்நிலையில், நடப்பு மக்களவை தேர்தலில் அவர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையெடுத்து அவருக்கு பதிலாக ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் களம் காணுகிறார். இந்நிலையில், பாஜக சார்பில் உத்தர பிரதேச அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் ரேபரேலி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த தினேஷ் பிரதாப் சிங், 2019 மக்களவை தேர்தலில் சோனியா காந்திக்கு எதிராக ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். இந்நிலையில், நடப்பு மக்களவை தேர்தலில் ராகுல் காந்திக்கு போட்டியாக அவர் மீண்டும் களம் காண உள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாகவே மக்களவை தேர்தலுக்கான பணிகளில் தானும் கட்சித் தொண்டர்களும் ஈடுபடத் தொடங்கியதாகவும், கடின உழைப்பின் மூலம் தேர்தலில் காந்தி குடும்பத்தை வீழ்த்தி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றும் தெரிவித்தார்.
ரேபரேலி தொகுதி மக்களின் அன்றாட தேவைகள் அனைத்தும் இன்னும் கோரிக்கைகளாகவே உள்ளதாகவும், அதை எதையும் காந்தி குடும்பத்தினர் முழுமைபடுத்தவில்லை என்றும் கூறினார். மக்கள் தேவைகளை நிவர்த்தி செய்ய தான் தொடர்ந்து அவர்கள் பக்கம் நிற்பேன் என்றும் குறிப்பிட்டார்.
உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் தினேஷ் பிரதாப் சிங் அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் காந்தி குடும்பம் சார்பில் சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டனர். அதன்பின் 2004 முதல் 20 ஆண்டுகளாக சோனியா காந்தி ரேபரேலி தொகுதி எம்பியாக இருந்தார். ரேபரேலி தொகுதியில் இன்று ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
இதையும் படிங்க:வயநாட்டை தொடர்ந்து ரேபரேலியிலும் களமிறங்கும் ராகுல்.. அமேதியை கைவிட காரணம் என்ன? - Lok Sabha Election 2024