மும்பை:288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்துக்கு நவ.20 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்தது. மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், சிவசேனா 81 இடங்களிலும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின.
எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் 101 வேட்பாளர்களையும், சிவசேனா 95 வேட்பாளர்களையும், சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் 86 வேட்பாளர்களையும் நிறுத்தின.
இந்நிலையில், இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 145 இடங்களை தக்க வைக்க வேண்டும் என்ற நிலையில், ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 221 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில் மகா விகாஸ் அகாதி 50 இடங்களில் பின் தங்கியுள்ளது.
போட்டியிட்ட 149 இடங்களில், பாஜக 125 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா போட்டியிட்ட 81 இடங்களில் 56 இடங்களிலும், 59 இடங்களில் போட்டியிட்ட அஜித் பவாரின் என்சிபி 36 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பின்னடைவை சந்தித்துள்ள காங்கிரஸ் வெறும் 21 இடங்களிலும், சிவசேனா (யுபிடி) 17 இடங்களிலும், சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் 13 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.