பாட்னா:பீகாரில் கடந்த 2015ஆம் ஆண்டு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அமைத்து சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டன. இந்த கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பப்பு யாதவ் என்பவர், ஜன் அதிகார் என்ற கட்சியை துவக்கினார்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பப்பு யாதவ், தனது கட்சியை காங்கிரசில் இணைத்துக் கொண்டார். காங்கிரஸ் கட்சியுடன் இணைந்ததை அடுத்து அவர் கூறுகையில், "ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரின் ஆசியால் எனது கட்சி காங்கிரசில் இணைக்கப்பட்டது.
தற்போது, லாலு பிரசாத் யாதவ் மற்றும் காங்கிரசுடன் இணைந்து இருப்பதால் 2024 மக்களவை மற்றும் 2025 சட்டப்பேரவை தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெறுவோம்" என்று தெரிவித்தார். ஜன் அதிகார் கட்சியைத் துவங்குவதற்கு முன்பு பப்பு யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, லோக் ஜனசக்தி கட்சி ஆகியவற்றில் இருந்தார்.
இந்நிலையில் கடைசியாக கடந்த 2015ஆம் ஆண்டு சொந்த கட்சியை துவங்குவதற்கு முன்பாக, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய கட்சி துவங்கிய பின்னரும் பப்பு யாதவ், லாலு பிரசாத் யாதவுடன் சுமூக உறவையே பேணி வந்தார். லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோரை பப்பு யாதவ் நேற்று (மார்ச்.19) சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
பீகாரின் பூர்னியா தொகுதியில் பப்பு யாதவ் போட்டியிட போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கு முன்பாக தொகுதி பங்கீட்டிற்கு முன், பப்பு யாதவ் காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருப்பது மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பப்பு யாதவின் மனைவி ரஞ்சிதா ரஞ்சன் காங்கிரஸ் கட்சியில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். பீகாரில் தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இங்கு காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவாரத்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தியா கூட்டணி கட்சியின் வேட்பாளர் பட்டியல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க :உலகின் உயரமான வாக்குப்பதிவு மையம்! எங்க இருக்கு தெரியுமா?