டெல்லி:ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினரான பர்த்ருஹரி மஹ்தாபை மக்களவை தற்காலிக சபாநாயகராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 95ன் கீழ் ஒடிசா மாநிலம் கட்டாக்கை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் மக்களவை இடைக்கால சபாநாயகராக நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நியமித்துள்ளதாக அவர் கூறினார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத் தொடர் தொடங்கிய முதல் இரண்டு நாட்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களின் பதவியேற்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 24ஆம் தேதி தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் முன்னிலையில் உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொள்வார்கள்.
இந்த பதவியேற்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். அவருக்கு காங்கிரஸ் தலைவர் கே.சுரேஷ், திமுக தலைவர் டி.ஆர்.பாலு, பா.ஜ.க உறுப்பினர்கள் ராதா மோகன் சிங் மற்றும் பக்கன் சிங் குலாஸ்தே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் ஆகியோர் அடங்கிய குழு உதவுவார்கள் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.