டெல்லி: 18வது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றும் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. கடந்த ஜூன் 9ஆம் தேதி நடந்த பதவியேற்பு விழாவில் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களின் பதவியேற்பு விழாவிற்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வருகை தந்தார்.
தற்போது இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக இன்று (ஜூன்.21) மீண்டும் டெல்லி வந்துள்ளார். வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் உள்ளிட்டோர் டெல்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்று அவரை வரவேற்றனர். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைந்த பிறகு வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு அரசுப் பயணம் இதுவாகும்.
இன்று மாலை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவர் சந்தித்துப் பேசுகிறார். தொடர்ந்து நாளை (ஜூன்.22) காலை ஷேக் ஹசீனா பிரதமர் மோடியை சந்திக்கிறார். அப்போது இரு நாட்டு நல்லுறவு குறித்தும், இந்தியா - வங்கதேசம் இடையே கடல் எல்லை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.