டெல்லி:மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 11ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. அமலாக்கத்துறையின் விசாரணையை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மக்களவை தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த இடைக்கால ஜாமீன் இன்றுடன் (ஜூன்.2) நிறைவடைந்த நிலையில், அவர் மீண்டும் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி திகார் சிறையில் அரவிந்த கெஜ்ரிவால் சரணடைந்தார். மக்களவை தேர்தலுக்கு பிரசாரம் செய்ய வேண்டி ஜாமீனில் வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மே 11 முதல் 30ஆம் தேதி வரை ஏறத்தாழ 67 ரோடுஷோக்கள், பேரணிகள், பொதுக் கூட்டங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களில் 30 நேர்காணல்களில் கலந்து கொண்டார்.
மேலும், உத்தர பிரதேசம், டெல்லி, பஞ்சாப், மகாரஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டார். முன்னதாக சரணடைவதை அடுத்து கட்சி உறுப்பினர்கள் மற்றும் எம்எல்ஏக்கள், ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் ஆகியோருடன் அரவிந்த் கெஜ்ரிவால் அலோசனையில் ஈடுபட்டார்.