தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்எல்ஏ! மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ்க்கு மேலும் பின்னடைவு! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

மத்திய பிரதேசம் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நேற்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்று பாஜகவில் இணைந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு பின்னடைவாக 6 முறை எம்.எல்.ஏவான ராம்நிவாஸ் ராவத் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 6:33 PM IST

ஷியாபூர்: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த அக்சய் கண்டி பாம் நேற்று (ஏப்.29) திடீரென தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றதுடன் பாஜகவில் இணைந்தார்.

மக்களவை தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரிதும் பின்னடைவாக கருதப்பட்டது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவாக 6 முறை எம்எல்ஏவாக இருந்த ராம்நிவாஸ் ராவத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

சியோபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்நிவாஸ் ராவத் அந்த தொகுதியின் எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது. 1990, 1993, 2003, 2008, 2013 ஆகிய தேர்தல்களில் விஜய்பூர் தொகுதியில் இருந்து ராம்நிவாஸ் ராவத் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இதில் 1998ஆம் ஆண்டு பாஜக வேட்பாளர் பாபுலால் மெவ்ராவை எதிர்த்து போட்டியிட்டு 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

அதைத் தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு பாஜக வேட்பாளர் சீதாராமை எதிர்த்து போட்டியிட்டு 2 ஆயிரத்து 840 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளர் நரேந்திர சிங் தோமரை எதிர்த்து போட்டியிட்ட போதும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 341 வாக்குகள் வித்தியாசத்தில் மொரேனா தொகுதியில் தோல்வியை சந்தித்தார்.

இதையடுத்து கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் விஜய்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிக்கிறார். இந்நிலையில், நடப்பு மக்களவை தேர்தலில் மொரேனா தொகுதியில் போட்டியிட முடிவு செய்து அதற்காக கட்சியிடம் முறையிட்டார்.

ஆனால், காங்கிரஸ் கட்சி சத்யபால் சிங் சிகர்வாருக்கு வாய்ப்பு வழங்கியது. அதில் ஏமாற்றமடைந்த ராம்நிவாஸ் ராவத், இன்று (ஏப்.30) மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்ளும் சமயத்தில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். மத்திய பிரதேச காங்கிரஸில் முக்கியத் தலைவராக இருந்த ராம்நிவாஸ் ராவத் பாஜகவில் இணைந்து இருப்பது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சரிவை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

மேலும், மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 மக்களவை தொகுதிகளில், ஏப்ரல் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தல்களில் 12 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மீதமுள்ள 17 தொகுதிகளுக்கு மே 7 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மூன்றாம் மற்றும் நான்காம் கட்டத் தேர்தல்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சத்தீஸ்கர் பாதுகாப்பு படையினர் என்கவுன்டர்: 2 பெண் உள்பட 7 நக்சல்கள் சுட்டுக் கொலை! - Chhattisgarh Naxalite Encounter

ABOUT THE AUTHOR

...view details